Friday, April 25, 2008

ஹஜ்ரத் பஷீர் சேட் ஆலிம்........

நமதூர் பெரிய பள்ளிவாசல் மஹல்லாவில் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக நம் பள்ளிவாசலின் இமாமாக் இருந்து நம் அனைவருக்கும் தீன்நெறி சேவை செய்து வரும் கண்ணியத்திற்கும் மரியாதைக்குமுரிய ‘பெரிய ஹஜ்ரத்' அவர்களை நாம் அனைவரும் அறிவோம்.

ஒரு காலத்தில் பள்ளிக்கல்வியைக் கூர் ( 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு ) நிறைவு படுத்தாத நிலையில் மத்ரஸாவிற்கு சென்று ஓதி ஆலிம்கள் உருவாகி வந்தனர். அந்த காலகட்டத்தில், அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி. 11வது வகுப்பு வரை படித்து கல்லூரிக்கு செல்வதற்கு பதில் அரபிக் கல்லூரிக்கு சென்று லால்பேட்டை மன்பவுல் அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரியில் மார்க்க கல்வி கற்று, சுயமாக தொழில் தேடிக் கொண்டிருந்த நேரம் !

நமதூர் பெரிய பள்ளியின் இமாமாக சிறப்பாக செயல்பட்டு தமது சிறந்த கல்வியறிவாலும், பேச்சாற்றலாலும் நமதூர் மக்களின் உள்ளங்களிலும், தமிழகம், பர்மா, மலேசியாவில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் மக்களின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்ற ‘சேட் ஆலிம் ஹஜ்ரத்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட கண்ணியத்திற்குரிய மௌலானா ஷம்சுத்தீன் சேட் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்கள் 1976 ஆம் ஆண்டு இறைவனின் நாட்டப்படி தாருல் பனாவை விட்டு தாருல் பகா சென்றடைந்த காரணத்தால், தகப்பனார் விட்டுச்சென்ற தீன்நெறி சேவையை தமையனார் பொறுப்பேற்று ஊர் மக்களுக்கு நல்வழி காட்டும்படி கூறிய ஜமாஅத்தார்களின் அன்புக்கட்டளையை தட்டமுடியாமல் ஏற்று, இன்று வரை சுமார் 33 ஆண்டுகள் நமதூர் மஹல்லாவில் சிறப்பாக சேவையாற்றி வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் அழகிய உயர் குணத்தின் மூலம், நம் வீட்டில் ஒருவராகவும் நம் இன்ப துன்பங்களில் நமக்கு ஆறுதலாகவும், அனைவருக்கும் ஆசானாகவும், தீன்நெறி வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் ஹஜ்ரத் அவர்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் சேவை மனப்பான்மையையும், திறமையையும் மதித்து தமிழக அரசு ‘தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்' பதவியை கொடுத்து கௌரவித்தது.1975 முதல் இரண்டாண்டுகள் அப்பதவியை அலங்கரித்து அரசுக்கு அரிய பல ஆலோசனைகளை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.

1975 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிரிந்து ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளுக்கு உதவி செய்து ஹஜ் கடமையை அனைவரும் பரிபூரணமாக செய்திட தமிழக அரசால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இரண்டு வழிகாட்டிகளில் ஹஜ்ரத் அவர்களும் ஒருவராவார்கள். அச்சமயம் தானும் ஹஜ் செய்து மற்ற மக்களையும் திருப்தியுடன் ஹஜ் செய்ய வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர்கள்.

இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா என்னும் ஆலிம்களின் சபையின் தலைவர், செயலாளர் என பல கட்டங்களில் பல வகையான பொறுப்புக்களை வகித்து சிறப்பாக செயலாற்றியுள்ளார்கள். மேலும் இராமநாதபுரம் மாவட்ட ஷரீஅத் கவுன்சில் என்னும் மார்க்க தீர்ப்பாயம் ஆரம்பித்தது முதல் இன்று வரை அதன் உறுப்பினர்கள் சிலரில் ஒருவராக ஹஜ்ரத் அவர்களும் பொறுப்பேற்று, நமது சமுதாய மக்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஜமாஅத்தில் ஏற்படும் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு ஷரீஅத் அடிப்படையில் தீர்ப்புக்கூறி குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றார்கள்.

கல்வி கற்க வசதியில்லாத ஏழை எளிய மாணவர்கள் இவர்களைத் தேடி வரும்போது நமது சமுதாய பிரமுகர்களிடம் உதவி பெற்றுக் கொடுத்து பல மாணவர்களின் வாழ்வில் கல்விக் கண் திறந்துள்ளார்கள்.

அதே போன்று ஏழைக்குமர்களின் பெற்றோர்களும் தங்களின் குமர்காரியம் நிறைவேற உதவிதேடி வரும்போதும் தன்னால் முடிந்தவரை நம் சமுதாயப் பிரமுகர்களிடம் உதவியைப் பெற்றுக் கொடுத்து ஏழைக்குமர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார்கள்.

நமதூரில் கடந்த 15 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் நைனா முஹம்மது காதரம்மாள் டிரஸ்டின் மார்க்க ஆலோசகராகவும், மேற்படி டிரஸ்டின் கீழ் செயல்பட்டு வரும் ரஹ்மானியா எத்தீம்கானாவின் முதல்வராகவும் இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றார்கள்.

அன்பாலும், பாசத்தாலும் அனைவரிடமும் பழகும் உன்னத உயர் பண்புகளாலும் ‘தனக்கு நிகர் தானே' என்னும் அளவுக்கு நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட கண்ணியமிகு ஹஜ்ரத் அவர்களின் துபாய் வருகை நம் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியே ! அல்ஹமதுலில்லாஹ் !!

அவர்களை துபாய் வாழ் முதுகுளத்தூர் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பாக வரவேற்பதிலும், கௌரவிப்பதிலும் நாங்கள் பெருமை கொள்கின்றோம். எல்லாம் வல்ல இறைவன ஹஜ்ரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நீடித்த சுகத்தையும் கொடுத்து நம் அனைவருக்கும் கண்குளிர்ச்சியாக ஆக்கிவைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி துஆச் செய்கின்றோம்.


ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்
சார்பில்

மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி ஆலிம்
மார்க்க ஆலோசாகர்

No comments: